PUBLISHED ON : ஜூலை 21, 2026 12:00 AM

பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண்: கடந்த 2001ல் நானும், பிரியதர்ஷினியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். மனைவி, ஒரு கம்பெனியில் மனிதவளத் துறை தலைவராக இருந்தார்; மிகவும் கெட்டிக்காரர். அதேபோன்று குடும்ப பொறுப்பு, குழந்தைகளை பார்த்துக் கொள்வது என, எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
அவருக்கு பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருந்தது. அடிக்கடி சர்க்கரை அளவு குறைந்து, மயக்கம் போட்டு விழுவார்; உடனே மருத்துவரிடம் அழைத்து செல்வோம். சரி செய்து அனுப்புவர்.
ஒருநாள் இரவு 9:00 மணிக்கு நான் வீட்டுக்கு வந்தபோது துாங்கி கொண்டிருந்தார். வேலைப் பளு காரணமாக சோர்வில் துாங்குகிறார் என்று விட்டு விட்டேன். அடுத்த நாள் காலையும் எழுந்து கொள்ளவில்லை. ரொம்ப நேரமாகியும் எழுந்து கொள்ளாததால், என் மகள் தான் எழுப்பினாள்.
எந்த அசைவுமின்றி ஒரே நிலையில் மனைவி படுத்திருந்ததை பார்த்ததும், 'ஆம்புலன்ஸ்' வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், சர்க்கரை அளவு, 28 என்று காட்டியது. மிகவும் ஆபத்தான நிலையில் உங்கள் மனைவி உள்ளார் என்று சொல்லி, மருத்துவம் பார்த்தனர். மூளையில், 98 சதவீதம் இயக்கம் இல்லை. 'மறுபடி பழைய நிலைக்கு வருவது கஷ்டம்' என்று கூறிவிட்டனர். ஏழு மாதங்கள் எந்த இயக்கமும் இல்லாமல், மருத்துவமனையில் இருந்தார். ஒரு நாள் காலை, மாரடைப்பில் இறந்து போனார்.
அந்த நிமிடம் முதல், என் மகள், மகனுக்கு நான் எல்லாமுமாக இருந்து வருகிறேன். என் அம்மா, சமையல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார். உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் என் இரு குழந்தைகளிடமும் அன்பாக இருப்பர். ஆனாலும், அவர்களால் அம்மா ஞாபகத்தை தவிர்க்க முடிவதில்லை.
என் மனைவியுடன், 21 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறேன். அவர் இல்லாத வாழ்க்கைக்கும், வெறுமைக்கும் வீடு பழகி இருந்தாலும், மனம் நம்ப மறுக்கிறது; எதையும் மறக்க முடியவில்லை.
எனக்கு இன்னொரு திருமணம் செய்யும்படி பலரும் அறிவுரை தருகின்றனர். மகனுக்கு 23, மகளுக்கு 18 வயது ஆகிறது. அவர்களே தங்களை பார்த்துக் கொள்கின்றனர். என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும். அதனால், இன்னொரு திருமணம் தேவையில்லை என்று முடிவெடுத்தேன்.
வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும், நம் முன் சவால்களை வைத்தபடியே தான் இருக்கும். கடந்த கால சோகத்தை விட, எதிர்கால நம்பிக்கை தான் என்னை இயக்கி வருகிறது. அந்த வகையில், என் குழந்தைகளை கரை சேர்க்கும் பொறுப்பை அப்பாவாக மட்டுமல்லாமல், அம்மாவாகவும் நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும்.
