ADDED : ஆக 02, 2026 07:50 AM
சொல்கிறார்கள்/ 03/08/26 திங்கள் இதழ்
-–––––––
பசுமை விகடன், மே., 10.2026. பக்:55
––––––––––––
‘ஏராளமான
குடும்பங்களை
வாழ வைக்கும்
பனங்கிழங்கு!’
–––––––––––
கடந்த 45 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலுடன், பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்:
சேதுக்கரையிலும், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பலரும், பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பனங்கிழங்கு வியாபாரம் களைகட்டும். இங்கிருந்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பனங்கிழங்குகளை அனுப்புகிறோம்.
இதில், அதிக விற்பனை வாய்ப்பு இருப்பதுடன், லாபகரமான விலையும் கிடைப்பதால், இப்பகுதி மக்கள் குடிசைத் தொழில் போல், பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கள் மாவட்டமான ராமநாதபுரத்தில் கோவில்களும், சுற்றுலாத் தலங்களும் இருப்பதால், இந்தியா முழுதும் இருந்து சுற்றுலாப் பயணியர் இங்கு வருகின்றனர். அவர்களை நம்பி தான், பனங்கிழங்கு வியாபாரம் நடக்கிறது.
இங்குள்ள பெண்கள், காலையில் ஊரக வேலை உறுதித் திட்ட பணிக்கு சென்று வந்த பின், மாலையில் பனங்கிழங்கு வியாபாரம் பார்ப்பர்; இது, அவர்களுக்கு கூடுதல் வருமானமாக இருக்கிறது.
நான் ஒரு மீனவன். இப்போது, மூன்று பனங்காடுகளை குத்தகைக்கு எடுத்துள்ளேன்; இங்கு, 700 பனை மரங்கள் உள்ளன; ஓராண்டுக்கு இந்த மரங்கள் என் பொறுப்பில் இருக்கும். நுங்கு, பனங்காய்கள் மற்றும் பனை மட்டைகள் விற்பனை வாயிலாக, கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை பனம் பழம், ‘சீசன்’ காலம். பனை மரங்களில் இருந்து விழும் பழங்களை சேகரித்து நவம்பர், டிசம்பரில் விதைகளைப் பிரித்து விதைப்போம். மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்றும் வேலை இருக்காது. ரசாயன உரங்கள் தேவையில்லை. விதைத்த 100 நாட்களில் கிழங்குகள் முளைத்து விடும்.
கடந்தாண்டு, 15,000 விதைகளை பதியம் போட்டேன்; அதில் 14,000 விதைகள் முளைத்து, தரமான கிழங்குகள் கிடைத்தன. ஏழு பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு, 50 ரூபாய் என்று விற்பனை செய்தேன். மொத்தம், 2,000 கட்டுகள் விற்பனை செய்ததன் வாயிலாக, 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. எல்லா செலவுகளும் சேர்த்து 20,000 போக, 80,000 ரூபாய் லாபமாக கிடைத்தது.
பனங்கிழங்கு சாகுபடி செய்ய குறைந்த அளவு இடமே போதும். இங்குள்ள பெண்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிழங்குகள் உற்பத்தி செய்து, வீட்டு வாசலில் வைத்து விற்பனை செய்கின்றனர். இந்தப் பகுதியில் பனங்கிழங்கு உற்பத்தி தான், ஏராளமான குடும்பங்களை வாழ வைக்கிறது.
***
