ADDED : ஜூலை 06, 2024 02:30 AM
படேல் நகர்: வடக்கு டில்லியின் படேல் நகரில் துப்பாக்கிமுனையில் ஒரு நபரிடம் 10 லட்ச ரூபாய் கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜூன் 20ம் தேதி, இரவு 8:14 மணியளவில், படேல் நகர் பகுதியில், இரு பைக்குகளில் வந்த கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில் 10 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்ததாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரவீன் என்பவரிடம் கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்தனர். அவர் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் முகவராகப் பணியாற்றி வருகிறார். படேல் நகருக்கு பணத்தை கொண்டு சென்றபோது, கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணை நடத்தி வந்த நிலையில், தருண் சேகல், 28, மோனு, 26, ஹிமான்ஷு, 25, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட சேகல் மீது, சிவில் லைன்ஸ் பகுதியில் 1.25 கோடி ரூபாய் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.
மோனு மீது கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட 15 வழக்குகள் உள்ளன. ஹிமான்ஷு மீதும் கொள்ளை வழக்குகள் உள்ளன.