ADDED : மே 07, 2024 11:26 PM

உத்தரகன்னடா : ஓட்டுப்பதிவு பாதுகாப்பு பணிக்கு செல்லும் போது, எஸ்.ஐ.,யின் வாகனம் பழுதடைந்து நின்றதால், ஓட்டுச்சாவடிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டார்.
உத்தரகன்னடாவின் தான்டேலி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், தான்டேலி நகர் போலீசாருக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. போலீசாருக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் பழையவை.
முக்கியமான பணிகளுக்கு செல்லும் போது, வழியில் வாகனங்கள் பழுதடைந்து நிற்பது வழக்கமாக உள்ளது. தான்டேலி நகர் எஸ்.ஐ., நேற்று மதியம் பாதுகாப்பு பணிக்காக புறப்பட்டார். ஜரூர் கிராமத்தின் அருகில் செல்லும் போது, ஜீப் பழுதடைந்து நின்றது. இதனை அருகில் இருந்த கேரேஜில் விட்டு விட்டு, வேறு வாகனத்தில் ஓட்டுச்சாவடிக்கு சென்றார்.
'உத்தரகன்னடாவின், பல்வேறு பிரச்னைகளை தீர்த்து பணியாற்றும் எஸ்.பி., விஷ்ணு வர்த்தன், தான்டேலி நகர போலீசாருக்கு தரமான வாகனங்களை வழங்க வேண்டும்' என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

