ADDED : மே 05, 2024 05:46 AM

பெங்களூரு: தண்ணீர் பற்றாக்குறையால், கீரை விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கிணறுகள், ஆறுகள், ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. கீரை தோட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. விளைச்சல் குறைந்துள்ளது எனவே கீரைகளின் விலை ஏறுமுகமாக உள்ளது.
இதற்கு முன், ஒரு கட்டு தண்டுக்கீரை விலை 10 ரூபாயாக இருந்தது. இப்போது 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. வெந்தய கீரை 10 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும், பாலக்கீரை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், அரைக்கீரை 15 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால், கீரை பிரியர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், பலரும் கீரை விளைவிப்பதை நிறுத்தி உள்ளனர். நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே, கீரை பயிரிடுகின்றனர்.