ADDED : டிச 11, 2025 12:20 AM

கட்சிரோலி: மஹாராஷ்டிராவில் மூத்த நக்சல்கள் 11 பேர் நேற்று சரண் அடைந்தனர். இவர்களது தலைக்கு மாநில அரசு மொத்தம், 82 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தது.
சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் பதுங்கியிருந்த 11 நக்சல்கள், நேற்று, மாநில போலீஸ் டி.ஜி.பி., ரஷ்மி சுக்லா முன் சரண் அடைந்தனர். அவர்களில் நான்கு பேர் நக்சல் சீருடை அணிந்திருந்தனர்.
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இவர்களை பிடித்து கொடுத்தால் மொத்தம் 82 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், மஹா., அரசு கடந்த 2005 முதல் அமல்படுத்தியுள்ள நக்சல் சரண் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, மூத்த நக்சல்களான கட்சிரோலியை சேர்ந்த டிவிஷனல் கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ் லெகமி, 57; பீமா கோவாசி மற்றும் சத்தீஸ்கரை சேர்ந்த பொரிய கோட்டா, 41; ரத்தன் ஓயம், 32; கமல் வேலடி, 30; பொரி வேலடி, 36.
ராமாஜி புங்கடி, 35; சோனு காடோ, 19; பிரகாஷ் புங்கடி, 22; சீதா பல்லோ, 22; சாய்நாத் மேட், 23 ஆகியோர் சரண் அடைந்ததாக டி.ஜி.பி., தெரிவித்தார்.

