உ.பி.,யில் 'யு டியூப்' பார்த்து மது போதையில் ஆப்பரேஷன் போலி டாக்டரால் பெண் பலி
உ.பி.,யில் 'யு டியூப்' பார்த்து மது போதையில் ஆப்பரேஷன் போலி டாக்டரால் பெண் பலி
ADDED : டிச 11, 2025 12:20 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், சட்ட விரோதமாக, 'கிளினிக்' நடத்தி வந்த போலி டாக்டர், மது போதையில், சமூக ஊடகமான, 'யு டியூப்' பார்த்து சிறுநீரக கல் நீக்கும் ஆப்பரேஷன் செய்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உ.பி.,யின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கோத்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கியான் பிரகாஷ் மிஸ்ரா. போலி டாக்டரான இவர், கோத்தி பகுதியில், ஸ்ரீ தாமோதர் அவுஷதால்யா என்ற கிளினிக்கை நடத்தி வந்தார்.
இங்கு, முனிஷ்ரா ராவத் என்ற பெண் சிறுநீரக கல் பிரச்னைக்காக சிகிச்சை பெற வந்தார். வலியால் அவதிப்பட்ட அவரிடம், ஆப்பரேஷன் செய்து கல்லை நீக்க வேண்டும் எனக் கூறி, மருத்துவ மனையில் சேர்த்தார் கியான் பிரகாஷ்.
ஆப்பரேஷன் கட்டணம், 25,000 ரூபாய் எனக்கூறியவர், முன்பணமாக, 20,000 ரூபாய் பெற்றார். அதன்பின், ரேபரேலி அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் பணிபுரியும் உறவினரான விவேக் குமார் மிஸ்ராவுடன் இணைந்து, கியான் பிரகாஷ் ஆப்பரேஷன் செய்தார்.
ஆழமாக வெட்டியதில் பல நரம்புகள் துண்டானதால் முனிஷ்ராவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.
கியான் பிரகாஷ் மது போதையில், யு டியூப் பார்த்து ஆப்பரேஷன் செய்ததால் முனிஷ்ரா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டனர். இதையடுத்து கியான் பிரகாஷ், விவேக் குமார் மிஸ்ரா தப்பி ஓடிவிட்டனர். வழக்குப் பதிந்த போலீசார், சட்ட விரோதமாக இயங்கிய கிளினிக்குக்கு 'சீல்' வைத்தனர்.

