1,650 'இண்டிகோ' விமானங்கள் இயக்கம்: ஒரு வாரத்துக்கு பின் சேவையில் முன்னேற்றம்
1,650 'இண்டிகோ' விமானங்கள் இயக்கம்: ஒரு வாரத்துக்கு பின் சேவையில் முன்னேற்றம்
ADDED : டிச 08, 2025 12:13 AM

புதுடில்லி: நாட்டின் முன்னணி விமான நிறுவனமான, 'இண்டிகோ' தன் பயண சேவையில் ஐந்து நாட்களாக சந்தித்து வந்த இடையூறுகளில் இருந்து மெல்ல மீண்டுவர துவங்கி உள்ளது. நேற்று, 2,300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில், 1,650 விமான சேவைகளை இயக்கியது.
விமான பயணியரின் பாதுகாப்பு கருதி விமான போக்குவரத்து இயக்குநரகம், விமானி மற்றும் பிற விமான ஊழியர்களுக்கான புதிய பணி கட்டுப்பாட்டு விதிகளை ஜூலையில் அறிமுகப்படுத்தியது. பின், இது முழு அளவில் நவம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது.
போதிய அவகாசம் இருந்தும் இந்த விதிக ளுக்கு இணங்க, 'இண்டிகோ' நிறுவனம் தயாராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக தினமும் நுாற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு இண்டிகோ நிறுவனம் தள்ளப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், தினமும் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்பு விதிகளில் இருந்து, 'இண்டிகோ' நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 வரை விமான போக்குவரத்து அமைச்சகம் தளர்வு வழங்கியது.
இருப்பினும், 'விமான சேவைகளை முன்னறிவிப்பின்றி திடீரென அதிகளவில் ரத்து செய்ததற்காக, 'இண்டிகோ' நிறுவனம் இன்றைக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தவிர விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.
இந்நிலையில், பாதுகாப்பு விதிகளின் தளர்வு காரணமாக, 'இண்டிகோ' விமானங்களின் இயக்கம் நேற்று ஓரளவு சீரடைந்தது. 1,650 விமான சேவைகள் இயக்கப்பட்டன; 650 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஆறு முக்கிய விமான நிலையங்களில், 80 சதவீத இண்டிகோ விமானங்கள் குறித்த நேரத்தில் இயங்கின. வரும் நாட்களில் நிலைமை முழுமையாக சீரடையும் என, 'இண்டிகோ' தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
'இது நடக்கும்
என எச்சரித்தோம்'
'இண்டிகோ' நிறுவன விமானி ஒருவர், பெயர் குறிப்பிடாமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: 'இண்டிகோ'வின் வீழ்ச்சி ஒரே நாளில் நிகழவில்லை. பல ஆண்டுகளாகவே இது புகைந்து கொண்டிருந்தது. தற்போது பற்றி எரிய துவங்கியுள்ளது. உள்ளிருந்து எச்சரித்தோம்; ஆனால் யாரும் கேட்கவில்லை. விதிகள் கடுமையாகின, ஓய்வு குறைந்தது, ஊழியர்கள் அவமானப் படுத்தப்பட்டனர். நிர்வாகம் அவற்றை கண்டுகொள்ளவில்லை. விமான உதவி பணியாளர்கள் முதல் விமானி வரை கடும் பணிச்சுமையை சந்தித்தனர். நிர்வாகம் அனைவரின் பாதுகாப்பு மற்றும் ஊழியரின் நலனை புறக்கணித்தது. வேலையில் இருப்பதே பெரிய விஷயம் என்றனர். ஊழியர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட நெருக்கடியின் வெளிப்பாடே இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

