ஆப்ரிக்காவில் சிக்கி தவித்த 17 தொழிலாளர்கள் மீட்பு
ஆப்ரிக்காவில் சிக்கி தவித்த 17 தொழிலாளர்கள் மீட்பு
ADDED : ஆக 27, 2025 03:11 AM
ராஞ்சி: ஆப்ரிக்க நாடான கேமரூனில் வேலைக்கு சென்ற ஜார்க்கண்டை சேர்ந்த 17 தொழிலாளர்கள், அங்கு பணமின்றி தவித்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சகம் உதவியுடன் மாநில அரசு மீட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ, ஹசாரிபாக் மாவட்டங்களை சேர்ந்த 19 பேர், மேற்கு ஆப்ரிக்க நாடான கேமரூன் சென்றனர். தனியார் நிறுவனம் வாயிலாக அங்கு சென்ற அவர்கள், மின் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை கடந்த 4 மாதமாக அந்த நிறுவனம் தரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், 'வீடியோ' வாயிலாக தங்கள் நிலை குறித்து மத்திய - மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, ஜார்க்கண்ட் தொழிலாளர் துறையினர் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, அவர்களை மீட்க வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வெளியுறவு அமைச்சகம் கேமரூனில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக அங்கு சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து, 17 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு நேற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி வந்த தனர். மேலும் இருவர் இன்று வருவர் எனவும், அவர்களது சம்பள பாக்கியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜார்க்கண்ட் புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாடு அறை அதிகாரி சிகா லக்ரா தெரிவித்தார்.