ADDED : பிப் 28, 2024 06:10 AM
பெங்களூரு : கர்நாடகாவில் சட்டவிரோதமாக 175 வெளிநாட்டினர் வசித்து வருவது, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் வழங்கிய, தரவுகள்படி தெரிய வந்துள்ளது.
வங்கதேசம், மியான்மர், மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இத்தகையவர்களை கண்டறிந்து, அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை, கர்நாடகா அரசு செய்து வருகிறது.
சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கைது செய்து, அவர்களை நாடு கடத்தும் வரை, சட்டவிரோத தடுப்பு காவலில் வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம், கர்நாடகா உள்துறை அலுவலகத்திற்கு வழங்கிய தரவுகள்படி, கர்நாடகாவில் தற்போது 175 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இவர்களில் 153 பேர் பெங்களூரில் உள்ளனர். இதில் 104 பேர் மியான்மரில் இருந்து வெளியேறிய, ரோஹிங்கியா அகதிகள் ஆவர்.
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் குடியேறுவது அதிகரித்து வருவதால், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்படி, அனைத்து போலீஸ் நிலையத்திற்கும், உள்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

