ADDED : பிப் 08, 2024 12:17 AM
சத்ரபதி சம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவில், மத சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் 2,000 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டன.
மஹாராஷ்டிரா மாநிலம், நாந்தெட் மாவட்டம், கோஷ்ட்வாடி கிராமத்தில் மதச் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 2,000 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு மாலை உணவு பரிமாறப்பட்டது. அங்கு உணவு அருந்தியவர்களில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு நேற்று காலை முதல் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டன. முதற்கட்டமாக 150 பேர் லோஹா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின், அங்கு உணவருந்திய அனைவரும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு நீரிழப்பை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஐந்து மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். விசாரணையில் மத நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு கெட்டுப்போனதால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது தெரிந்தது.

