சத்தீஸ்கரின் சுக்மாவில் மேலும் 29 நக்சல்கள் சரண்
சத்தீஸ்கரின் சுக்மாவில் மேலும் 29 நக்சல்கள் சரண்
ADDED : ஜன 15, 2026 01:59 AM

சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சல்கள் 29 பேர், நேற்று போலீசில் சரணடைந்தனர்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா, சுக்மா மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழிக்கும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் கோகுண்டா பகுதியில் செயல்பட்டு வந்த, 29 நக்சல்கள் நேற்று போலீசில் சரணடைந்தனர்.
இது குறித்து சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது:
மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 29 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.
கோகுண்டா பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர்களில் குறிப்பிடத்தக்கவர், மாவோயிஸ்ட் முன்னணி அமைப்பான, தன்டகாரன்ய ஆதிவாசி கிஷான் மஜ்துார் அமைப்பின் தலைவர் போடியம் புத்ரா.
பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இவரை பிடித்து கொடுத்தால், 2 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மற்ற நக்சல்கள் ஜனதா சர்க்கார், போராளி குழு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள்.
கோகுண்டா பகுதி, நக்சல்களுக்கு பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்ட நிலையில், முகாம் அமைத்து நக்சல் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டதால், நக்சல்கள் நெருக்கடிக்கு ஆளாகி சரண் அடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜனவரி 8ல், தண்டேவாடா மாவட்டத்தில் 63 நக்சல்கள் சரணடைந்தனர். இதேபோல் சுக்மா மாவட்டத்தில் ஜன., 7ல், 26 நக்சல்கள் சரணடைந்தனர்.

