ராஜ்யசபா எம்பி சுதாமூர்த்தி நினைப்பது தவறு: சித்தராமையா விமர்சனம்
ராஜ்யசபா எம்பி சுதாமூர்த்தி நினைப்பது தவறு: சித்தராமையா விமர்சனம்
ADDED : அக் 17, 2025 07:00 PM

பெங்களூரு: '' பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே சர்வே நடத்தப்படுகிறது என நினைப்பது தவறு,'' என ராஜ்யசபா எம்பி சுதாமூர்த்தியின் முடிவு குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வேயை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விரும்பாதோருக்கு விலக்கு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவியும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதா மூர்த்தி ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்க விருப்பமில்லை என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்கவில்லை. நாங்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே, இந்த சர்வேயால் எந்த பயனும் இல்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சர்வேயில் பங்கேற்கப்போவதில்லை என கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே சர்வே நடத்தப்படுகிறது என நினைப்பது தவறு. வரும் நாட்களில் மத்திய அரசும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்களா?
தங்களிடம் உள்ள தவறான புரிதல் காரணமாக அவர்கள் இத்தகைய கீழ்படியாமையை காட்டக்கூடும். கர்நாடகாவில் 7 கோடி பேர் உள்ளனர். அந்த மக்களின் பொருளாதாரம், கல்வி குறித்து அறிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த சர்வே நடத்தப்படுகிறது. சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் உயர்ஜாதிகள் இணைக்கப்படுவார்கள். இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. அரசு இது குறித்து விளக்கமளித்துள்ளது. 7 கோடி பேருக்குமான சர்வே இது. இவ்வாறு அவர் கூறினார்.