உங்கள் கனவில் தோன்றும் பிரதமர் மோடி; ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் டிரம்பை கிண்டலடித்த அமைச்சர்
உங்கள் கனவில் தோன்றும் பிரதமர் மோடி; ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் டிரம்பை கிண்டலடித்த அமைச்சர்
ADDED : அக் 17, 2025 05:56 PM

புதுடில்லி; 'டிரம்ப் கனவில் பிரதமர் மோடி அடிக்கடி தோன்றுகிறார் போலிருக்கிறது' என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் கிண்டல் பதிவு வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக தம்மிடம் உறுதி அளித்தார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அவரின் இந்த கருத்தை தொடர்ந்து, இரு தலைவர்களுக்கும் (மோடி-டிரம்ப்) இடையே எந்த உரையாடலும் நடக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந் நிலையில், இதே விவகாரத்தில், டிரம்ப் கனவில் அடிக்கடி பிரதமர் மோடி வருகிறார், அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்று மீண்டும் டிரம்ப் கூறி உள்ளார். இதை மத்திய அரசு மறுத்துள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் விவகாரத்திலும் இப்படித் தான் நடந்தது.
டிரம்ப் கனவில் பிரதமர் மோடி தோன்றுகிறார், அங்கு அவரிடம் (பிரதமர் மோடியிடம்) டிரம்ப் பேசுகிறார். காலையில் எழுந்தவுடன் இதை ஊடகங்களுக்கு தெரிவிக்கிறார். இப்படித்தான் நான் உணர்கிறேன். அவரின் கனவுகள் எப்போதுமே நனவாகாது.
இவ்வாறு அமைச்சர் அனில் விஜ் கூறி உள்ளார்.