வரி ஏய்ப்பில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 350 கிலோ ஏலக்காய் பறிமுதல்
வரி ஏய்ப்பில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 350 கிலோ ஏலக்காய் பறிமுதல்
ADDED : நவ 08, 2025 12:47 AM

மூணாறு: வரி ஏய்ப்பு செய்ய தனியார் பஸ்சில் ஏற்றி விடப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான 350 கிலோ ஏலக்காய் ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகளிடம் சிக்கியது.
கேரள மாநிலம் தேவிகுளம் ஜி.எஸ்.டி. துறை அதிகாரி நாசர் தலைமையிலான குழு நேற்று முன்தினம் மூணாறு அருகே அடிமாலியில் சோதனையில் ஈடுபட்டனர். நெடுங்கண்டத்தில் இருந்து கண்ணுார் செல்லும் தனியார் பஸ் இரவு 7:00 மணிக்கு அடிமாலி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. அதனை சோதனையிட்டபோது இருக்கைகளுக்கு அடியில் 7 மூடைகளில் ஏலக்காய் இருந்தது. அதனை யாரும் சொந்தம் கொண்டாட வில்லை என்பதால், கண்டக்டர், டிரைவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களும் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை என்றனர். இவர்களிடம் வாக்குமூலம் பெற்று 7 மூடைகளில் இருந்த 350 கிலோ ஏலக்காயை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சம்.
ஏலக்காய்க்கு வரி ஏய்ப்பு செய்ய எண்ணி உரிமையாளர் நுாதன முறையை கையாண்டதாகவும், மூன்று மாதத்திற்கு பிறகு ஏலக்காய் ஏலம் விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்த ஏலக்காய் தேவிகுளம் ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

