விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட்: டி.ஜி.சி.ஏ., அதிரடி 'இண்டிகோ' குளறுபடி
விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட்: டி.ஜி.சி.ஏ., அதிரடி 'இண்டிகோ' குளறுபடி
ADDED : டிச 13, 2025 12:29 AM

புதுடில்லி: 'இண்டிகோ' விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகள் தொடர்பாக, விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தர விட்டுள்ளது.
விமானி மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவற்றில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் திருத்தம் செய்தது.
நடவடிக்கை இந்த புதிய நடைமுறை, நவம்பர் 1ல் அமலுக்கு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, தனியார் துறையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான இண்டிகோ இணங்கவில்லை.
இதனால், அந்நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முடங்கியுள்ள சேவையால், லட்சக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்றும், கர்நாடகாவின் பெங்களூரில் மட்டும், 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து டி.ஜி.சி.ஏ., தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விமான செயல்பாட்டு ஆய்வாளர்களாக பணியாற்றும் ரிஷ் ராஜ் சாட்டர்ஜி, சீமா ஜம்னானி, அனில் குமார் போகரியால், பிரியம் கவுசிக் ஆகிய நான்கு பேரை டி.ஜி.சி.ஏ., சஸ்பெண்ட் செய்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவன செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் லட்சக்கணக்கான பயணியர் தவித்ததையடுத்து, இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள், டி.ஜி.சி.ஏ.,வின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை செயல் பாடுகளின் ஒரு பகுதியாக பணியாற்றி வந்தனர்.
விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதும், விமானிகள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இவர் களின் முக்கிய பணி.
விசாரணை முன்னதாக, இண்டிகோ விமான சேவைகளில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய, நான்கு பேர் அடங்கிய விசாரணை குழுவை டி.ஜி.சி.ஏ., அமைத்தது.
இக்குழு, இண்டிகோ நிறுவனத்தின் மீதான கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று முன் தினம் முகாமிட்டு செயல்பாடுகளை கண்காணித்தனர்.
இதற்கிடையே, இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்சிடம், இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.

