கடலை மிட்டாய் சாப்பிட்ட 45 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு
கடலை மிட்டாய் சாப்பிட்ட 45 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு
ADDED : டிச 01, 2024 04:09 AM

துமகூரு: கோனனகுரிகே கிராமத்தில், பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட கடலை மிட்டாய் சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிகளில் வழங்கப்படும் இலவச மதிய உணவு சாப்பிட்டு, மாணவர்கள் உடல் நிலை பாதிக்கும் சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன. இத்தகைய சம்பவங்கள், பள்ளிகளின் மதிய உணவின் தரம் பற்றி சந்தேகம் எழுப்புகின்றன.
மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதாக கூறி, பள்ளிகளில் வழங்கும் உணவே, மாணவர்களுக்கு விஷமாக மாறுகிறது. அழுகிய காய்கறிகள், புழுத்துப் போன தானியங்கள், காலாவதியான மசாலா பொருட்கள் பயன்படுத்துவதே, இத்தகைய அசம்பாவிதங்களுக்கு காரணமாகிறது. ஆனாலும் அதிகாரிகள் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை.
இதை துமகூரு, பாவகடாவின் கோன்னகுரிகே கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை; முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. அதே போன்று, நேற்று முன் தினம், கோன்னகுரிகே அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடலைமிட்டாய் வழங்கப்பட்டது.
அதை சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள், வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களின் உடல் நிலை குறித்து, டாக்டர்களிடம் தகவல் கேட்டறிந்தனர். அசம்பாவிதத்துக்கு என்ன காரணம் என, விசாரிக்கின்றனர்.