'அம்ரித் மருந்தகங்கள் மூலம் 6.85 கோடி நோயாளிகள் பயன்'
'அம்ரித் மருந்தகங்கள் மூலம் 6.85 கோடி நோயாளிகள் பயன்'
ADDED : நவ 16, 2025 03:04 AM

புதுடில்லி: மத்திய அரசின் மலிவு விலை மருந்தகமான, 'அம்ரித்' மூலம், 6.85 கோடி நோயாளிகள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தெரிவித்தார்.
மலி வு விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில், 2015ல் மத்திய அரசு, 'அம்ரித்' எனப்படும், மலிவு விலை மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான நம்பகமான பொருட்கள் விற்பனையகம் என்ற ம ருந்தகங்களை திறந்தது.
இதன் 10ம் ஆண்டு கொண்டாட்டதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சர் நட்டா புதிதாக 10 அம்ரித் மருந்தகங்களை ஜம்மு, மும்பை உள்ளிட்ட இடங்களில் நேற்று திறந்து வைத்தார். பின் நட்டா பேசியதாவது:
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலில் துவங்கப்பட்ட அம்ரித் மருந்தகம் இப்போது, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம், 255 கடைகளாக விரிவடைந்துள்ளன.
உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை, 50 சதவீதம் முதல், 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இந்த மருந்தகங்கள், வழங்குகின்றன. இதன் மூலம், 6.85 கோடி நோயாளிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். குறிப்பாக ஏழைகள் அதிக பலன் அடைந்துள்ளனர்.
இந்த மருந்தகங்கள் வாயிலாக, 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மருந்துகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 8,500 கோடி ரூபாயை மக்கள் சேமித்துள்ளனர்.
தற்போது அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் இந்த மருந்தகங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அம்ரித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கடும் முயற்சி மேற்கொண்ட, 'எச்.எல்.எல்., லைப் கேர்' நிறுவனத்துக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.

