மும்பை புறநகரில் கோர விபத்து மாநகர பஸ் மோதி 7 பேர் பலி
மும்பை புறநகரில் கோர விபத்து மாநகர பஸ் மோதி 7 பேர் பலி
ADDED : டிச 11, 2024 12:36 AM

மும்பை, மஹாராஷ்டிராவில் பயணியருடன் சென்ற மாநகர, 'எலக்ட்ரிக்' பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஏழு பேர் பலியாகினர்; 42 பேர் படுகாயமடைந்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான குர்லா ரயில் நிலையத்தில் இருந்து அந்தேரி நோக்கி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் எலக்ட்ரிக் பஸ் நேற்று முன்தினம் இரவு சென்றது.
குர்லா மேற்கு பகுதியை கடந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி இழுத்துச் சென்றதுடன், பாதசாரிகள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அதன்பின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி சென்ற பஸ், அங்குள்ள தடுப்பில் மோதி நின்றது.
விபத்தில் சிக்கிய நபர்களின் அழுகுரலை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் போலீசார் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஏழு பேர் உயிரிழந்ததாகவும், மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பஸ் டிரைவர் சஞ்சய் மோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவருக்கு எலக்ட்ரிக் பஸ் ஓட்டி முன் அனுபவம் இல்லாததால் விபத்து நேர்ந்தது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
டிரைவரை வரும் 21ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்திற்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், இரங்கல் தெரிவித்தார்.
அத்துடன், அவர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் மும்பை மாநகராட்சி மற்றும் மாநகர போக்குவரத்து கழக நிர்வாகங்கள் ஏற்கும் எனவும் அவர் அறிவித்தார்.