ADDED : ஜன 25, 2024 04:23 AM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் 869 பால்ய விவாஹம் என்ற குழந்தைகள் திருமண வழக்குகளும், 98 சிறுமியர் கர்ப்பிணிகளாக இருந்த நிலைமையும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது,'' என, மூத்த சிவில் நீதிமன்ற நீதிபதியும் சட்ட சேவை குழுமத்தின் செயலர் சுனில் எஸ்.ஹொசமணி தெரிவித்தார்.
கோலார் மாவட்ட அளவிலான உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாக பவனில் உள்ள அரங்கில் நடந்தது.
எஸ்.எஸ்.எல்.சி. - பி.யூ.சி. - சி.இ.டி. - நீட் தேர்வுக்கான புத்தகங்களை வழங்கி மூத்த சிவில் நீதிமன்ற நீதிபதி சுனில் எஸ்.ஹொசமணி பேசுகையில், ''குழந்தைகளுக்கு சமுதாய அறிவு மிக முக்கியம். குழந்தைத் தொழிலாளர் முறை, பால்ய விவாஹம் என்ற குழந்தை திருமணம் ஆகியவற்றைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
''சிறுவர்கள் மீதான பலாத்காரத்தை தடுப்பதற்காகவே 'போக்சோ' சட்டம் உள்ளது. இதற்காக இலவச சகாயவாணி செயல்படுகிறது. இதில் புகார் செய்யலாம். பால்ய விவாகம் தடுப்பதற்கு ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உள்ளது,'' என்றார்.
ஜில்லா பஞ்சாயத்து தலைமை அதிகாரி பத்மா பசந்தப்பா பேசியதாவது:
கோலார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 98 சிறுமியர் கர்ப்பம் அடைந்தனர்.
இவற்றைத் தடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு பொறுப்பு உள்ளது. எந்த ஒரு மாணவியும் மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், அவர்கள் மீது ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். கிராம பஞ்சாயத்துகளில் பெண்கள் பாதுகாப்பு குழு உள்ளது.
பள்ளிகளில் மாணவியர் விசித்திரமான ஹேர் ஸ்டைலில் வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். அவர்களின் பெற்றோரை வரவழைத்து உணர்த்த வேண்டும். 19 அரசு பள்ளிகளில் பி.யூ.சி. மாணவர்களுக்கு, உடுப்பியில் இருந்து ஆன்லைன் மூலம் நீட், சி.இ.டி., வகுப்புகளுக்கு பாடம் நடத்த முன் வந்துள்ளனர்.
கோலார் மாவட்டத்திலும் வாய்ப்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும். கிராம பஞ்சாயத்து நுாலகங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க 'சஹாய வாணி' திட்டம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா பேசுகையில், ''சி.எஸ்.ஆர். திட்டத்தில் கோச்மல் மற்றும் சில கம்பெனிகளின் நிதி உதவியில் இன்னும் 15 நாட்களில் 6 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தப்பட உள்ளது. கனரா வங்கி தங்கவயல் அரசு கல்லூரிக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கனரா வங்கி புக் பவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு பி.யூ. கல்லுாரிக்கும் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.
கோலார் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், அனைத்து உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.