ADDED : நவ 15, 2024 11:09 PM
பெங்களூரு: 'பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு என்ன வழி?' என பள்ளி சிறுவன், துணை முதல்வர் சிவகுமாரை குடைந்தெடுத்தான்.
பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால், போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதைத் தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 30 கி.மீ., துாரத்திற்கு, சுரங்க சாலை அமைப்பதற்கு என்.எச்.ஏ., எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இதன் மூலம், நெரிசல் உள்ள ஓசூர் சாலை, துமகூரு சாலை, பல்லாரி சாலை, மைசூரு சாலை, பழைய மெட்ராஸ் சாலை ஆகிய சாலைகளை எளிதில் கடந்துவிடலாம். ஆனால், இத்திட்டத்தினால் பெங்களூரு நகருக்கு பிரச்னை ஏற்படுமென கருதுவதால் திட்டத்தை கைவிடுமாறு பெங்களூரு வெதர்மேன் அரசிடம் கோரினார். இதனால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, ஒரு சிறுவன், 'பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு என்ன வழி?' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிவகுமார், ''போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சுரங்க சாலைகளே தீர்வு. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சுரங்க சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்படும்,'' என்றார்.

