'அணு ஆயுத சோதனை விவகாரத்தில் தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்': ராஜ்நாத் சிங்
'அணு ஆயுத சோதனை விவகாரத்தில் தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்': ராஜ்நாத் சிங்
UPDATED : நவ 07, 2025 11:52 PM
ADDED : நவ 07, 2025 11:47 PM

புதுடில்லி: “தேச பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விவகாரங்களில், இந்தியா வேறு நாட்டின் உத்தரவின் படியோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது; நாட்டு நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அரசு முடிவுகளை எடுக்கும்,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சி-ங்கிடம், 'அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தும்' என, அந்நாட்டு அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தது தொடர்பாகவும், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துகிறது எனக் கூறியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராஜ்நாத் சிங் அளித்த பதில்:
இந்தியா என்ன செய்யும் என்பதை எதிர்காலம் சொல்லும். அமெரிக்கா அல்லது பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதால், இந்தியாவுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாது. அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனரோ அதை செய்யலாம்.
தகுந்த நேரத்தில், நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ, அதை சரியாக செய்வோம். தேச பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விவகாரங்களில், வேறு நாட்டின் உத்தரவின் படியோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ இந்தியா முடிவு எடுக்காது-.
நாட்டு நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அரசு முடிவுகளை எடுக்கும். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் தரப்பில் இருந்து போரை நிறுத்துவது தொடர்பாக தொலைபேசி அழைப்புகள் வந்தன.
பலமுறை அழைப்பு வந்தும், நாம் அடைய வேண்டியதை அடைந்த பின்பே, நம் நடவடிக்கையை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம். தேவைப்பட்டால், நாம் அதை மீண்டும் செய்வோம்.
இந்த போர் நிறுத்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையில்தான் நடந்தது. இதில், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

