ADDED : நவ 23, 2024 10:59 PM

மன்னர் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் சிறந்த சிற்பிகள் உள்ளனர். இவர்களின் கைவண்ணத்தில் உருவாகும் சிற்பங்கள், கடவுள் சிலைகள் மக்களை கவர்கின்றன.
கர்நாடகாவின் பல்வேறு கோட்டைகள், அரண்மனைகள், புராதன கோவில்களில் கலை நயத்துடன் கூடிய சிற்பங்களை காணலாம். இவற்றை பார்க்கும்போது, அந்த காலத்தின் சிற்ப கலைஞர்களின் கலைத்திறனை பார்த்து, ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. நுணுக்கங்களுடன் சிற்பங்களை உருவாக்கி உள்ளனர்.
குறைந்தது மவுசு
மன்னராட்சி முடிந்து, மக்களாட்சி ஆரம்பமான பின், சிற்ப கலைஞர்களுக்கு மவுசு குறைந்தது. சிற்பக்கலை நலிவடைந்தது.
தற்போது அங்கொருவர் இங்கொருவருமாக சிற்பிகள் உள்ளனர். இவர்களின் திறமை குடத்தில் இட்ட விளக்காய் உள்ளது. இவர்களில் ராஜ்குமார் ஷில்பியும் ஒருவர்.
பீதரின் வித்யாநகரில் வசிப்பவர் ராஜ்குமார் ஷில்பி. இவர் அற்புதமான சிற்ப கலைஞர், கோவில் கோபுரங்கள் கட்டுவது, கடவுள் சிற்பங்களை செதுக்குவது, இவரது தொழில்.
ஆத்ம திருப்தி
கலைத்திறன் கொண்டவர் என்றாலும், யாரிடமும் அதிகமான பணம் கேட்பதில்லை. மக்கள் கொடுப்பதை பெற்றுக் கொண்டு, தேவையான சிற்பங்களை செதுக்கி தருகின்றனர்.
பணத்துக்காக இவர் இந்த தொழிலை செய்யவில்லை. தன் ஆத்ம திருப்திக்காக செய்கிறார். கடவுள்கள் சிலை மட்டுமின்றி, தேச தலைவர்களின் உருவங்களையும் செதுக்கி உள்ளார். பசவண்ணர், வீர சிவாஜி, காந்தி, அம்பேத்கர் உட்பட பலரின் உருவச்சிலைகள் செதுக்கி உள்ளார்.
பீதரின், நவுபாத் புறநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 25 அடி உயரமான சிவன் சிலை, ராஜ்குமாரின் கைவண்ணத்தில் உருவானது. பிரதாப் நகரில் உள்ள ஹனுமன் கோவிலின் கோபுரம், இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பீதர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், இவர் செதுக்கிய சிலைகளை காணலாம்.
இவர் உருவாக்கும் சிலைகளுக்கு, கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் அதிகமான மவுசு உள்ளது.
தன் கலைத்திறனில், நவீனத்தை கொண்டு வருவது குறித்து, தமிழகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
அந்த கால சிற்பிகள், உளியை கொண்டு பாறைகளை சிற்பங்களாக மாற்றினர். இந்த கால சிற்பி ராஜ்குமார் ஷில்பி, காலத்துக்கு தகுந்தபடி ஸ்டீல், சிமென்ட், மணல், செங்கல் பயன்படுத்தி விதவிதமான சிலைகளை உருவாக்குகிறார்.
தன் கலையை வைத்து பணமாக்காமல், ஒரு சேவையாக செய்வதை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.
இவரை போன்றவர்களால், கர்நாடகாவுக்கு பெருமைதான்.
சிற்பி ராஜ்குமாரின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள்
- நமது நிருபர் -.