நடிகை பாலியல் பலாத்கார வழக்கு: குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை
நடிகை பாலியல் பலாத்கார வழக்கு: குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை
ADDED : டிச 13, 2025 12:31 AM

கொச்சி: நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2017ல், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடித்துவிட்டு வேனில் வீடு திரும்பினார்.
அத்தாணி பகுதியில் வேன் வந்த போது, அதை மறித்த கும்பல் ஒன்று, உள்ளே சென்று நடிகைக்கு பாலியல் தொல்லை தந்தது.
தீர்ப்பு இந்த காட்சிகள் 'மொபைல் போன்' மூலம் படம் பிடிக்கப்பட்டு வேறொரு நபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடிகை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற் கொண்ட போலீசார், நடிகை யின் டிரைவர் சுனில் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகைக்கும் இடையிலான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையில் நடிகர் திலீப் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரையும் போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவித்தனர்.
மொத்தம், 10 பேர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை, எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட 261 பேர் இந்த வழக்கில் சாட்சியளித்தனர்.
இதில், 28 பேர் அப்ரூவராக மாறி, பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில், கடந்த 8ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. போதிய ஆதாரமில்லாததால், நடிகர் திலீப் உட்பட நான்கு பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சுனில் உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.
இழப்பீடு அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட சுனில், மார்டின் அந்தோணி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேருக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய பென்டிரைவை, விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

