மது போதையில் பைலட் சஸ்பெண்ட் செய்தது ‘ஏர் இந்தியா’
மது போதையில் பைலட் சஸ்பெண்ட் செய்தது ‘ஏர் இந்தியா’
ADDED : செப் 25, 2026 07:13 PM
புதுடில்லி: சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் இருந்து, டில்லிக்கு புறப்பட இருந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தின் துணை விமானி மது அருந்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இருந்து டில்லிக்கு, ‘ஏர் இந்தியா’வின், ஏ.ஐ., 151 என்ற விமானம் கடந்த 6ம் தேதி புறப்பட இருந்தது. அப்போது விமானத்தின் துணை விமானியிடம் மது வாடை வீசுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு மூச்சுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர் மது அருந்தியது உறுதியானதால், உடனே அவரை விமானத்தில் இருந்து இறக்கி, இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, துணை விமானியை சஸ்பெண்ட் செய்து, ‘ஏர் இந்தியா’ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட் – டில்லி இடையே விமானத்தை இயக்கிய விமானி கஞ்சா பரிசோதனையில் சிக்கியதில், பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், மற்றொரு ‘ஏர் இந்தியா’ விமானி மீது புகார் எழுந்திருப்பது பயணியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
