அபாய கட்டத்துக்கு சென்றது காற்று மாசு அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைப்பு
அபாய கட்டத்துக்கு சென்றது காற்று மாசு அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைப்பு
ADDED : நவ 09, 2025 01:07 AM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு, நேற்று அபாய கட்டத்துக்குச் சென்றது. டில்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 400ஐ தாண்டியது. இதனால், மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டில்லி அடைந்துள்ளது.
காற்று மாசை கருத்தில் கொண்டு வரும் 15ம் தேதி முதல் பிப்., 15ம் தேதி வரை அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சியில் வேலை நேரத்தை மாற்றி அமைத்து முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை காற்று மாசு அபாய கட்டத்துக்குச் செல்லும். கடுங்குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக டில்லிவாசிகள் கடும் அவதிப்படுவர். இந்த ஆண்டும் அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்தே காற்று மாசு அதிகரிக்கத் துவங்கியது. மேலும், 10 ஆண்டுகளாக டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, தீபாவளியை முன்னிட்டு அக்., 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால், அக்., 21ம் தேதியில் இருந்து காற்று மாசு உச்சத்துக்கு சென்றது. அடுத்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த காற்று மாசு நேற்ரு மீண்டும் உச்சத்துக்கு சென்றது.
டில்லியில் காற்றின் சராசரி தரக்குறியீடு நேற்று முன் தினம் 322ஆக இருந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு 361ஆக பதிவாகி இருந்தது. அலிப்பூர் - 404, ஐ-.டி.ஓ., - 402, நேரு நகர் - 406, விவேக் விஹார் - 411, வஜிர்பூர் - 420, புராரி - 418 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. இது, அபாயகரமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதேபோல, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நொய்டா - 354, கிரேட்டர் நொய்டா - 336, காஜியாபாத் - 339 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக பஞ்சாபில் 100, ஹரியானாவில் 18 மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 164 பேர் மீது நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு டில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையும் என டில்லி காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.
காற்றின் தரக்குறியீடு 50 வரையில் இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை. 51 முதல் 100 வரை திருப்தியான நிலை, 101 முதல் 200 மிதமான நிலை, 201 முதல் 300 மோசமான நிலை, 301 முதல் 400 மிகவும் மோசமான நிலை மற்றும் 401 முதல் 500 என்றால் அது அபாய கட்டம் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது.
காற்று மாசைக் கட்டுக்குள் வைக்க தண்ணீர் தெளித்தல், வெளிமாநில வாகன கட்டுப்பாடு என டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், அரசு அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
டில்லி அரசு அலுவலகங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும், டில்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் செயல்படுகின்றன.
டில்லியில் காற்றுமாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அரசு ஊழியர்கள் அவதிப்படுவதாலும் வேலை நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. வரும் 15ம் தேதி பிப்., 15ம் தேதி வரை டில்லி அரசு அலுவலகங்கள் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், மாநகராட்சி அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் செயல்படும்.
நவ., 15ம் தேதி முதல் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

