தலைமை தேர்தல் கமிஷன் முன் கூடிய அனைவரும் விடுவிப்பு
தலைமை தேர்தல் கமிஷன் முன் கூடிய அனைவரும் விடுவிப்பு
ADDED : ஜூலை 10, 2025 10:19 PM
புதுடில்லி:தடை உத்தரவு அமலில் உள்ள நேரத்தில், டில்லி தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் கூடிய, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரையன், சகரிகா கோஷ் உள்ளிட்ட பத்து பேருக்கு வழக்கில் இருந்து விலக்கு அளித்து, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, டில்லி தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் கூட தடை இருந்தது. அந்த தடையை மீறி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரையன், சகரிகா கோஷ், சாகத் கோகலே உள்ளிட்ட பத்து பேர், அந்த அலுவலகம் முன் கூடினர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, டில்லி கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நேகா மிட்டல் முன் நேற்று விசாரிக்கப்பட்டது.
அப்போது, இந்த வழக்கிலிருந்து, குற்றஞ்சாட்டப்பட்ட, பத்து பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 30ல், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் கோர்ட் உத்தரவிட்டது.
அதன் பின், மே 13ல், அனைவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.