ஹாசனாம்பா உற்சவத்துக்கு அம்பாரி 'டபுள் டெக்கர் பஸ்'
ஹாசனாம்பா உற்சவத்துக்கு அம்பாரி 'டபுள் டெக்கர் பஸ்'
ADDED : அக் 25, 2024 10:55 PM

ஹாசன்: ஹாசனாம்பாவை தரிசிக்க பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், 'டபுள் டெக்கர் பஸ்' போக்குவரத்தைத் துவக்கியது.
ஹாசனின், ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுவது வழக்கம். 10 நாட்கள் திறந்திருக்கும். நேற்று முன் தினம் மதியம் 12:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். அதிகாலை 4:00 மணிக்கே பக்தர்கள் வரிசையில் நிற்க துவங்குகின்றனர்.
வெளி மாநிலங்கள் உட்பட கர்நாடகாவின் ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசிக்க வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, கே.எஸ்.டி.டி.சி., அம்பாரி டபுள் டெக்கர் பஸ் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, கே.எஸ்.டி.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:
பக்தர்கள், சுற்றுலா பயணியர் வசதிக்காக கே.எஸ்.டி.டி.சி., 'அம்பாரியில் ஹாசன்' என்ற பெயரில், சுற்றுலா பயணியருக்காக டபுள் டெக்கர் பஸ் அறிமுகம் செய்துள்ளது. ஹாசனாம்பா உற்சவத்தையொட்டி, ஹாசனில் செய்துள்ள மின் விளக்கு அலங்காரத்தை, அம்பாரி பஸ்சில் அமர்ந்தபடி ரசிக்கலாம்.
பஸ்சின் மேற்பகுதிகளில் பயணம் செய்ய, 350 ரூபாய்; கீழ்ப்பகுதி இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து, இந்த பஸ் புறப்படும். நகரை சுற்றி பார்த்த பின், மீண்டும் புறப்பட்ட இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படும்.
அம்பாரி டபுள் டெக்கர் பஸ் போக்குவரத்து, நேற்று (முன் தினம்) துவங்கியது. இந்த சேவை நவம்பர் 3ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஹாசன் நகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ், ஏ.வி.கே., கல்லுாரி சாலை, ஆர்.சி.சாலை, எஸ்.பி., அலுவலகம் முன் பகுதி, பி.எம்.சாலை, ரயில் நிலையம், டெய்ரி சதுக்கம், என்.ஆர்.சதுக்கம் சென்று மீண்டும் நகர பஸ் நிலையத்தை அடையும்.
முக்கிய அம்சங்கள்
l ஹாசனாம்பா உற்சவ மின் அலங்காரங்களால் தொந்தரவு ஏற்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல
l மழை பெய்தாலும், டிரிப்புகள் நடத்தப்படும்
l ஒரு முறை டிக்கெட் உறுதி செய்தால், ரத்து செய்யப்படாது
l பயணியர் எண்ணிக்கை அடிப்படையில் பஸ் புறப்படும்; திரும்பும் நேரத்தில் மாற்றம் இருக்கலாம்
l பஸ் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்பே, பயணியர் பஸ் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்
l 5 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு, முழுமையான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும்
l பயணத்தின்போது பயணியர் பொருட்கள் காணாமல் போனாலோ, சேதமடைந்தாலோ நாங்கள் பொறுப்பல்ல
l பஸ்சில் குறைந்தபட்சம், 15 பயணியர் இருந்தால் மட்டுமே சுற்றுலா துவங்கும்
கூடுதல் தகவல் வேண்டுவோர், 90197 12720, 91081 86776, சுற்றுலாத்துறை அலுவலக எண் 08171 - 268862 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.