ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை ஆந்திர அரசு அறிவிப்பு
ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை ஆந்திர அரசு அறிவிப்பு
ADDED : அக் 05, 2025 12:52 AM
விஜயவாடா: ஆந்திராவில் மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் ஆட்டோ, டாக்சி, வேன் டிரைவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அவர்களுக்கு ஆண்டுக்கு, 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில், 436 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும் 2.9 லட்சம் டிரைவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவர்களுக்கான உதவித் தொகை திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
அரசின் 'ஸ்திரீ சக்தி' எனப்படும் மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்தது.
அவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியுதவி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 15,000 ரூபாய் நிதியுதவி பல்வேறு கட்டங்களாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆட்டோ டிரைவர்கள் நல வாரியம் அமைக்கப்படும். ஆட்டோ, டாக்சி முன்பதிவுக்கு தனியார் மொபைல் செயலிகளை போல் அரசு சார்பில் பிரத்யேக செயலி கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.