மேலும் ஒரு சிவிங்கிபுலி குட்டி மத்திய பிரதேசத்தில் பலி
மேலும் ஒரு சிவிங்கிபுலி குட்டி மத்திய பிரதேசத்தில் பலி
ADDED : டிச 08, 2025 12:08 AM

குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்கா வனப்பகுதியில் சமீபத்தில் சிவிங்கிபுலி குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில், பூங்காவை ஒட்டிய சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மற்றொரு குட்டி நேற்று பலியானது.
நம் நாட்டில், 70 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த சிவிங்கிபுலிகளை மீண்டும் பராமரிக்க முடிவு செய்த மத்திய அரசு, சிவிங்கிபுலி மறுவாழ்வு திட்டத்தை 2022ல் அறிமுகப்படுத்தியது.
தென் ஆப்ரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கிபுலிகள், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.
இவற்றில், சில சிவிங்கிபுலிகள் குட்டிகளை ஈன்றன. ஒருசில சிவிங்கிபுலிகளும், குட்டிகளும் நம் நாட்டின் தட்பவெப்ப நிலை தாங்காமல் அடுத்தடுத்து இறந்தன.
குட்டிகளுடன் சேர்த்து 28 சிவிங்கிபுலிகள், குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.
இதில், அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 4ம் தேதி, தன் தாயுடன் விடப்பட்ட 20 மாதம் நிரம்பிய சிவிங்கிபுலி குட்டி ஒன்று மாயமானது. மறுநாள், இறந்த நிலையில் அதன் உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்காவில் இருந்து வழிமாறி சாலைக்கு வந்த 20 மாதமான மற்றொரு சிவிங்கிபுலி குட்டி ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நேற்று அதிகாலை பலியானது.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேசிய பூங்காவின் கஜுரி வனப்பகுதியில், காமினி என பெயரிடப்பட்ட சிவிங்கிபுலி மற்றும் அதன் நான்கு குட்டிகள், கடந்த மார்ச் மாதம் விடப்பட்டன. இதில், ஒரு குட்டிப்புலி வழிமாறி பூங்காவை ஒட்டிய ஆக்ரா - மும்பை தே சிய நெடுஞ்சாலையில் சென்ற போது, வாகனம் மோதி பலியாகியுள்ளது' என்றார்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அடையாளம் கண்டுள்ள போலீசார், அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

