விமான நிலையத்தில் மேலும் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் மெட்ரோ நிறுவனத்துக்கு 'டயல்' வலியுறுத்தல்
விமான நிலையத்தில் மேலும் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் மெட்ரோ நிறுவனத்துக்கு 'டயல்' வலியுறுத்தல்
ADDED : அக் 27, 2025 01:10 AM

புதுடில்லி: “டில்லி விமான நிலையத்தின் முதலாவது மற்றும் மூன்றாம் முனையத்துக்கு இடையில், மெட்ரோ ரயில் பாதையின் கோல்டன் வழித்தடத்தில் புதிய மெட்ரோ நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என, டில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்பூரியர் கூறினார்.
ஏரோ சிட்டி இதுகுறித்து, 'டயல்' எனப்படும் டில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்பூரியர் கூறியதாவது:
நாட்டின் மிகவும் பரபரப்பான டில்லி சர்வதேச விமான நிலையத்தின் மூன்று முனையங்களில், இரண்டு மற்றும் மூன்று ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. முதலாவது முனையம் சில கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.
ஏரோசிட்டி மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் முதலாவது முனையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பாதையின் கோல்டன் வழித்தடம் ஏரோசிட்டி மெட்ரோ ரயில் நிலையம் வரை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளனது. அதை முதலாவது முனையம் வரை நீட்டிக்க டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அந்த நிலையம் அமைந்தால், விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் இருந்து ஏரோசிட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை விமான பயணியர் எளிதாக அடைந்து விடலாம். அங்கிருந்து, அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கான மெட்ரோ ரயிலில் செல்ல முடியும்.
பிராந்திய ரயில் தற்போது, விமான நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் பாதையின் ஆரஞ்ச் வழித்தடம் மூன்றாவது முனையத்தை இணைத்துள்ளது. அதே நேரத்தில் மெஜந்தா வழித்தடம் முதலாவது முனையத்தை இணைத்துள்ளது. ஆனால், முதலாவது மற்றும் மூன்றாவது முனையத்துக்கு இடையே நேரடியாக மெட்ரோ ரயில் பாதை இல்லை.
ஏரோசிட்டி மெட்ரோ ரயில் நிலையம் ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் நிலையமாக மாற்றப்பட இருப்பதால், இந்த புதிய நிலையம் அமைந்தால், விமான பயணியருக்கு டில்லி நகருக்குள் செல்ல பயணம் எளிதாக இருக்கும். அதேபோல, ஆர்.ஆர்.டி.எஸ்., எனப்படும் பிராந்திய ரயில் போக்குவரத்து சேவையும் ஏரோசிட்டியை இணைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

