''கெஜ்ரிவாலுடன் போராடியதற்காக வருத்தப்படுகிறேன்'': அன்னா ஹசாரே
''கெஜ்ரிவாலுடன் போராடியதற்காக வருத்தப்படுகிறேன்'': அன்னா ஹசாரே
UPDATED : மார் 22, 2024 03:46 PM
ADDED : மார் 22, 2024 02:04 PM

புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இணைந்து ஹசாரேயின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என நாட்டின் முக்கிய பிரச்னைகளை வைத்து ஹசாரே டில்லியில் நடத்திய போராட்டம் பெரும் ஆதரவை பெற்றது.
ஹசாரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக அரசியல் கட்சி துவக்குவதாக அறிவித்தார், அரசியல் கட்சி வேண்டாம் என அவர் கெஜ்ரிவாலை எச்சரித்தார். ஆனாலும் 2012ல் ஆம்ஆத்மி கட்சியை உருவாக்கினார். டில்லியில் 3முறை முதல்வரானார் கெஜ்ரிவால். தற்போது புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை நேற்று (மார்ச் 21) அமலாக்கத்துறை கைது செய்தது.
கெஜ்ரிவாலின் குரு
கெஜ்ரிவாலின் குருவான அன்னா ஹசாரே வெளியிட்ட வீடியோவில், கூறியிருப்பதாவது:''மதுபான கொள்கைகளை வகுத்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரின் கைதுக்கு அவரே தான் காரணம்''மதுவுக்கு எதிராக போராடியவர் மதுபான கொள்கை முறைகேட்டில் சிக்கியுள்ளார். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.

