அருணாச்சல் நீர்மின் திட்டம்; ரூ.8,146 கோடி ஒதுக்கீடு
அருணாச்சல் நீர்மின் திட்டம்; ரூ.8,146 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 13, 2025 04:06 AM

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில், 700 மெகாவாட் திறன் உடைய நீர்மின் திட்டத்தை நடைமுறைப்படுத்த, 8,146 கோடி ரூபாயை ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு டில்லியில் நேற்று கூடியது. இதில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக, டாட்டோ நீர்மின் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
வடகிழக்கு மின் சக்தி கட்டமைப்பு மற்றும் அருணாச்சல் அரசு இணைந்து 700 மெகாவாட் திறன் உடைய நீர்மின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 8,146.21 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நீர்மின் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக 2,738.06 மில்லியன் யூனிட் எரிசக்தி உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அருணாச்சல பிரதேசத்திற்கு 12 சதவீதம் இலவசமாக வழங்கப்படும்.
இதேபோல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட உள்ள ஷி யோமி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் 458.79 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.