பார்லி.,யில் சிறப்பாக செயல்பட்ட 8 எம்.பி.,க்களுக்கு விருது: தி.மு.க., பாலுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பார்லி.,யில் சிறப்பாக செயல்பட்ட 8 எம்.பி.,க்களுக்கு விருது: தி.மு.க., பாலுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ADDED : டிச 18, 2025 12:56 AM

பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்த எட்டு எம்.பி.,க்களுக்கு 'லோக்மத் பார்லிமென்ட்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மராத்திய நாளிதழான, 'லோக்மத்' ஊடக குழுமம் கடந்த, 2017 முதல் பார்லிமென்டில் சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், தலா நான்கு பேர் என, எட்டு எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சிறந்த எம்.பி., சிறந்த பெண் எம்.பி., சிறந்த புதுமுக எம்.பி., வாழ்நாள் சாதனையாளர் என வெவ்வேறு பிரிவுகளில் இவ்விருதுகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தி.மு.க., - எம்.பி., பாலுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர் தொடர்ந்து ஏழாவது முறையாக எம்.பி.,யாக உள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.,யாக இரண்டாவது முறை பதவி வகித்து வரும் மூத்த காங்., தலைவர் திக்விஜய் சிங்குக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சிறந்த எம்.பி.,க்கான விருது, பா.ஜ.,வின் லோக்சபா எம்.பி., ஜெகதாம்பிகா பாலுவுக்கும், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங்குக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பெண் எம்.பி.,க்கான விருது பா.ஜ.,வின் லோக்சபா எம்.பி., சங்கீதா தியோவுக்கும், திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., டோலா சென்னுக்கும் கிடைத்தது.
லோக்சபாவுக்கான சிறந்த புதுமுக எம்.பி., விருது உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதி சமாஜ்வாதி எம்.பி.,யான இக்ரா சவுத்ரிக்கும், ராஜ்யசபாவுக்கான பிரிவில், 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்திக்கும் வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழங்கி கவுரவித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -

