ADDED : டிச 20, 2024 05:33 AM

பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமினில் உள்ள பவானி ரேவண்ணா, மைசூரு, ஹாசன் மாவட்டங்களுக்கு 15 நாட்கள் செல்ல, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ரேவண்ணா வீட்டில் பணியாற்றி வந்த பெண்ணையும் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரேவண்ணாவின் உத்தரவின்படி, அவரது உறவினர் சதீஷ் பாபண்ணா, அப்பெண்ணை கடத்தினார். கடத்தப்பட்ட பெண்ணின் மகன், மே 2ம் தேதி கே.ஆர்., நகர் போலீசில் அளித்த புகாரின்படி ரேவண்ணா, சதீஷ் பாபண்ணாவை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் பவானி ரேவண்ணா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. 'ஹாசன், மைசூருக்கு செல்லக்கூடாது' என்ற நிபந்தனையின்படி, அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது. 'என் சொந்த மாவட்டமான மைசூரின் கே.ஆர்.நகர், ஹாசனுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்' என பவானி ரேவண்ணா தரப்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ரவிவர்ம குமார் வாதிடுகையில், ''பெண் கடத்தப்பட்ட வழக்கில் முக்கியமாக செயல்பட்டவர் பவானி. எனவே, அவரை ஹாசன், மைசூருக்கு செல்ல அனுமதிக்க கூடாது,'' என்றார்.
இதற்கு நீதிமன்றம், 'மனுதாரர் மைசூரு, ஹாசன் ஆகிய இரு மாவட்டங்களுக்கு செல்ல, நாளை (இன்று) முதல் 15 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது. நிபந்தனையை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி, விசாரணையை, 2025 ஜன., 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.