தேதியை மாத்தணும்; சொல்கிறது பா.ஜ; தோல்வி பயம் என்கிறது காங்கிரஸ்!
தேதியை மாத்தணும்; சொல்கிறது பா.ஜ; தோல்வி பயம் என்கிறது காங்கிரஸ்!
ADDED : ஆக 26, 2024 07:44 AM

சண்டிகர்: தொடர் விடுமுறை வருவதால் ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. இதற்கு, 'தோல்வி பயமா' என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
மொத்தம், 90 இடங்களை கொண்ட ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்.,1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்.4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ''தேர்தல் தேதியான அக்.1ம் தேதிக்கு முன்பாக செப்.28, 29ம் தேதிகள் (சனி, ஞாயிறு ) விடுமுறை , தேர்தல் தேதியான அக் 1ம் தேதி விடுமுறை , அக்.02 காந்தி ஜெயந்தி, அக்.3 அக்ரசென் ஜெயந்தி என தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்'' என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
காங்.,சொல்வது என்ன?
 
'ஹரியானாவில் ஆளும் பா.ஜ.,வுக்கு தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் வந்துவிட்டது. இதனால் தான் பொய் குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் தேதி மாற்ற பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது' என அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பா.ஜ., பதில்
 
இதற்கு, ஹரியானா மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் விஜ் நிருபர்கள் சந்திப்பில் அளித்த பதில்: 'தொடர் விடுமுறை என்பதால் ஓட்டு சதவீதம் குறையும் என்று நாங்கள் கவலை தெரிவிக்கிறோம். அதை எதிர்க்கட்சிகள் தோல்வி பயம் அல்லது பலவீனம் என சொல்கின்றனர். காங்கிரஸ் இன்று எதிர்வினை ஆற்றியுள்ளது. நாங்கள் தேர்தல் தேதியை நீட்டிக்க கூறவில்லை. தொடர் விடுமுறைக்கு அடுத்து தேதி மாற்றுமாறு தான் கூறுகிறோம். நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். எங்களது கட்சியும் தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

