ADDED : ஜன 10, 2025 11:18 PM

புதுடில்லி:உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் வாக்காளர்களை டில்லி வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாக பா.ஜ., மீது குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா அருகே பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.
இந்நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களின் வாக்காளர்களை, புதுடில்லி சட்டசபை தொகுதியிலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை பா.ஜ.,தான் கையாளுகிறது. தேர்தல் ஆணையத்திடமும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 8 வரை 13,000 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை,” என, குற்றம்சாட்டியிருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா அருகே நேற்று காலை பா.ஜ.,வினர் திரண்டனர். கெஜ்ரிவாலை கண்டித்து கோஷமிட்டவாறே பங்களாவை நோக்கி சென்றனர்.
போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்ற பா.ஜ.,வினர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். மேலும், ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

