ADDED : நவ 26, 2024 08:33 PM

சண்டிகர்:சண்டிகரில் மதுபானக் கூடம் மீது இரண்டு வெடிகுண்டுகளை வீசியவரை போலீசார் தேடுகின்றனர்.
சண்டிகர் 26வது செக்டாரில் ராப்பர் பாட்ஷா என்பவரின் மதுபானக் கூடம் உள்ளது. நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, பைக்கில் வந்த இருவர், இரண்டு வெடிகுண்டுகளை மதுக்கூடம் மீது வீசி விட்டு தப்பினார். கூடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. சம்பவம் நடந்த போது மதுக்கூடத்துக்குள் 8 ஊழியர்கள் தங்கியிருந்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்தனர். ஆனால், அதற்குள் வெடிகுண்டுகளை வீசியவர்கள் தப்பிச் சென்று விட்டார். இந்தக் காட்சிகள் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளன.
தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்து சணல் கயிறு துண்டுகளை கைப்பற்றினர். மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.
இதுகுறித்து, சண்டிகர் டி.எஸ்.பி., தில்பாக் சிங் தலிவால் கூறியதாவது:
இரண்டு வெடிகுண்டுகளும் வீரியம் குறைந்தவை என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுக்கூடத்தின் ஜன்னல், கதவுகள் சேதம் அடைந்துள்ளன. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளில் குற்றவாளிகள் உருவம் தெளிவாக பதிவாகவில்லை. அவற்றை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.