ADDED : டிச 06, 2025 02:13 AM
சபரிமலை: சத்திரம் - புல்மேடு பாதையில் வரும் சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் தொடர்ச்சியாக பஸ்களை இயக்குகிறது.
வண்டிப்பெரியாறு -சத்திரம் - புல்மேடு பாதை, தமிழக பக்தர்களுக்கு வசதியானது. சபரிமலை சன்னிதானத்துக்கு வரும்போது செங்குத்தான இறக்கத்தில் வரவேண்டும். இவர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்குகிறது. வண்டிப்பெரியாறு பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் 16 முறை பஸ்கள் இயங்கும். அதிகாலை 5:30 மணிக்கு குமுளி டெப்போவில் இருந்து முதல் பஸ் புறப்படும். சத்திரத்தில் இருந்து கடைசி பஸ் மாலை 6:00 மணிக்கு புறப்படும். தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த 16 கி.மீ., துார ரோடு மிக குறுகியதும் பின் வளைவுகளை கொண்டதுமாக இருக்கிறது. இந்த துாரத்தை கடக்க 40 நிமிடம் ஆகிறது. தினமும் மதியம் 1:30 மணிவரை சத்திரத்தில் இருந்து புல் மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

