என்.சி.ஆர்., பகுதிகளுடன் தலைநகரை இணைக்க விரைவில் பஸ் வசதி
என்.சி.ஆர்., பகுதிகளுடன் தலைநகரை இணைக்க விரைவில் பஸ் வசதி
ADDED : நவ 14, 2025 12:35 AM

காஷ்மீர் கேட்:“என்.சி.ஆர்., எனும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை தலைநகருடன் இணைக்கும் வகையில் மீண்டும் பஸ்கள் இயக்கப்படும்,” என, முதல்வர் ரேகா குப்தா உறுதி அளித்தார்.
காஷ்மீர் கேட் பஸ் முனையத்தில் இருந்து ஹரியானாவின் சோனிபட் வரை டில்லி போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் மின்சார பஸ் போக்குவரத்தை முதல்வர் ரேகா குப்தா நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
மின்சார பஸ் குளிர்சாதன வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள், அவசரகால பொத்தான், பஸ் இயங்கும் வழித்தடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ்., வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆறு முறை இந்த பஸ் இயக்கப்படும். காஷ்மீர் கேட் முனையத்தில் இருந்து ஜி.டி.பி., நகர், ஆசாத்பூர் முனையம், ஜஹாங்கிர்புரி மெட்ரோ நிலையம், முகர்பா சவுக், அலிப்பூர், டில்லி - சிங்கு எல்லை, குண்ட்லி தொழில்துறை பகுதி, டி.டி.ஐ., நகரம், நங்கல் மோர், ராய், பஹல்கர், பாசில்பூர் வழியே சோனிபட் செல்லும்.
பாதிப்பு டில்லியில் இருந்து அதிகாலை 4:45, காலை 5:15, அதிகாலை 5:45, மாலை 4:45, மாலை 5:15 மற்றும் மாலை 5:45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சோனிபட்டிலிருந்து டில்லிக்கு, காலை 7:10, 7:25, 8:10, இரவு 7:30, 8:00, 8:30 மணிக்கு பஸ்கள் இயக்கப்படும்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், “என்.சி.ஆர்., எனும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை தலைநகருடன் இணைக்கும் வகையில் மீண்டும் பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.
''இந்த முயற்சி மக்களுக்கு ஏற்ற வகையிலும், தேவையான சேவையை போக்குவரத்துக்கழகம் வழங்கும். போக்குவரத்து நெரிசலையும் மாசுபாட்டையும் இந்த பஸ்கள் குறைக்கும்,” என்றார்.
மாநில போக்குவரத்து அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறுகையில், “மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தலைநகரை மற்ற பகுதிகளுடன் இணைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்றார்.

