சூதாட்டத்தால் கடன் சுமை; திருடனாக மாறிய தொழிலதிபர்
சூதாட்டத்தால் கடன் சுமை; திருடனாக மாறிய தொழிலதிபர்
ADDED : பிப் 09, 2026 01:17 AM

மும்பை: ஆன்லைன் சூதாட்டத்தில் சொத்துக்களை இழந்ததால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர், நகை பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான சியோன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்தன. இதையடுத்து, சம்பவ இடங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில், நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் தன் அடையாளம் தெரியக்கூடாது என் பதற்காக, ஹெல்மெட் அணிந்து ஒவ்வொரு குற்றச் செயலில் ஈடுபடும் முன் உடைகளை மாற்றியுள்ளார்.
இதேபோல் திருட்டு பைக்கை பயன்படுத்தி, தானே பகுதியில் நிறுத்திவிட்டு தன் வீட்டிற்கு சென்றதையும் கண்டறிந்தனர். எனினும், அனைத்து குற்றச்சம்பவங்களிலும் அந்த நபர் ஒரே ஷூவை அணிந்திருந்தார்.
இந்நிலையில் நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட அந்த நபரின் பெயர் மோகன் கோகட்டே, 49, என்பது தெரியவந்தது. சியோன் பகுதியைச் சேர்ந்த இவரை, திருட்டு பைக்கை எடுக்க சென்றபோது, அவர் அணிந்திருந்த ஷூவை அடையாளம் வைத்து, போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், மோகன் கோகட்டே, செல்வ செழிப்புமிக்க குடும்பப் பின்னணி கொண்டவர் என்பதும், தொழிலதிபராக இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் கடனாளியானதால், நகை பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர், 25 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

