வேட்புமனுவில் தவறான தகவல் ரெட்டி மனைவி மீது வழக்கு
வேட்புமனுவில் தவறான தகவல் ரெட்டி மனைவி மீது வழக்கு
ADDED : மார் 08, 2024 11:06 PM

வேட்புமனுவில் தவறான தகவலை குறிப்பிட்டதாக, எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி மனைவி அருணா லட்சுமி மீது, வழக்குப்பதிவாகி உள்ளது.
பல்லாரி தொகுதியில் தம்பி சோமசேகர் ரெட்டிக்கு எதிராக, மனைவி அருணா லட்சுமியை களம் இறக்கினார். ஓட்டுகள் பிரிந்ததால் காங்கிரஸ் வேட்பாளர் பரத் ரெட்டி வெற்றி பெற்றார்.
தேர்தலுக்கு முன்பு, அருணா லட்சுமி தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறான தகவல் குறிப்பிடப்பட்டு இருப்பதாக, சமூக ஆர்வலர் சீனிவாஸ் ரங்காரெட்டி என்பவர், அருணா லட்சுமி மீது காந்திநகர் போலீசில், கடந்த ஜனவரி 8ம் தேதி புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்த, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு, போலீசார் மனு செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜே.பிரீத், அருணா லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் அருணா லட்சுமி மீது, காந்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- நமது நிருபர் -