ரூ.22 கோடி ஜி.எஸ்.டி., மோசடி மஹா.,வில் 4 பேர் மீது வழக்கு
ரூ.22 கோடி ஜி.எஸ்.டி., மோசடி மஹா.,வில் 4 பேர் மீது வழக்கு
ADDED : டிச 22, 2025 12:05 AM
தானே: மஹாராஷ்டிராவில், போலி ஆவணங்கள் மூலம் ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நிறுவனங்களை உருவாக்கி, உள்ளீட்டு வரிச்சலுகையாக, 22 கோடி ரூபாயை மோசடியாக பெற்ற நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில், மாநில ஜி.எஸ்.டி., அதிகாரி ஒருவர் அளித்த புகார்:
'டயனமிக் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் நிகில் கெய்ட்வாட், நுார் முகமது வசீம் பிஞ்சாரி, நவநாத் சுக்ரியா கரத், சர்பராஜ் மற்றும் சிலர், ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, எட்டு போலி நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிறுவனங்கள் மூலம் எவ்வித வணிகமும் செய்யாமல், 22.06 கோடி ரூபாயை உள்ளீட்டு வரிச்சலுகையாக, சட்ட விரோதமாக பெற்றுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார் , நிகில் கெய்ட்வாட், நுார் முகமது வசீம் பிஞ்சாரி, நவநாத் சுக்ரியா கரத், சர்பராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

