ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நிச்சயம் அமல்படுத்தப்படும்: சித்து
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நிச்சயம் அமல்படுத்தப்படும்: சித்து
ADDED : பிப் 19, 2025 07:40 AM

பெங்களூரு : ''ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நிச்சயம் அமல்படுத்தப்படும். எந்த சந்தேகமும் வேண்டாம்,'' என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா, தலித் சமூகத்தினர், பல்வேறு அமைப்பினருடன், பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில், அவர் பேசியதாவது:
நான் முதல்வர் ஆனதில் இருந்து, சுரண்டப்பட்ட, தலித் சமூக மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறேன். உங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தலித் சமூகத்திற்கு பட்ஜெட்டில் 24 சதவீதம் மேம்பாட்டு நிதி ஒதுக்க சட்டம் இயற்றினோம். இந்த சட்டத்தை மத்திய அரசோ, பா.ஜ., ஆளும் மாநில அரசுகளோ செயல்படுத்தவில்லை.
அரசு பணிகளில், 1 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்களில், தலித் சமூகத்தை சேர்ந்த கான்ட்ராக்டர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தவர்கள் நாங்கள் தான். இதை 2 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வந்து உள்ளது. கண்டிப்பாக பரிசீலிப்பேன்.
நீங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று கேட்கிறீர்கள். வரும் நாட்களில் நிச்சயம் அமல்படுத்தப்படும். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
அந்த அறிக்கை அறிவியல்பூர்வமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. அறிக்கைக்கு ஏற்ப அரசு திட்டங்களை வகுக்க உதவியாக இருக்கும்.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என அனைவரையும் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவது எங்கள் அரசு நோக்கம். சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும்.
'ஜாதி அமைப்பால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மையால் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்' என்று அம்பேத்கர் கூறினார். சில சிக்கல்கள் காரணமாக நாடோடி சமூகத்திற்கு ஆணையம் அமைப்பது சாத்தியம் இல்லை. ஆனால் பட்ஜெட்டில் அந்த சமூகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.