சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாடு ரூ.46 கோடியில் பணிகள் துவக்கம்
சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாடு ரூ.46 கோடியில் பணிகள் துவக்கம்
ADDED : மார் 08, 2024 02:05 AM

மைசூரு: பிரசித்தி பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி கோவிலை, மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ், 45.70 கோடி ரூபாயில் மேம்படுத்தும் திட்டத்துக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
கர்நாடகாவின் பிரபல கோவில்களில், மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி கோவில் முக்கியமானதாகும். ஆண்டுதோறும் இங்கு தான் புகழ்பெற்ற தசரா விழா துவங்கப்படும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் வருவதுண்டு.
இந்த கோவிலை, மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ், 45.70 கோடி ரூபாயில் மேம்படுத்துவதாக மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் 2021ல் அறிவித்தது. இத்திட்டத்துக்கு, கடந்த ஜனவரி 16ம் தேதி, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
டெண்டர் பணிகள் முடிந்த நிலையில், மைசூரு சாமராஜேந்திரா மிருக காட்சி சாலையில், அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் இருந்தவாறு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதே வேளையில், மத்திய அரசின் 80 கோடி ரூபாயில், மிருக காட்சி சாலையை மேம்படுத்தும் பணியையும் பிரதமர் துவக்கி வைத்தார். மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, உள்ளூரில் நடந்த பூமி பூஜையில் பங்கேற்றார்.
கோவில் கோபுரம், விழா மேடை, பக்தர்கள் பைகள் வைக்கும் அறை, கழிப்பறைகள், பக்தர்கள் வரிசையில் நிற்கும் மண்டபம், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், மஹிசாசூரன் சிலை அமைந்துள்ள சதுக்கத்தில், குடிநீர் வசதி, நீரூற்று, நுழைவாயில், அலங்காரம், சிசிடிவி கேமராக்கள், ஒலிபெருக்கி வசதி செய்யப்பட உள்ளன.
தேவிகெரே ஏரி பகுதியில், கல் மண்டபம், கல் நுழைவாயில், படிக்கட்டுகள் மறு சீரமைத்தல், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதுபோன்று, நந்தி சிலை அருகில், பக்தர்கள் நிற்பதற்கு மண்டபம், அமரும் மண்டபம், குடிநீர் வசதி; தேவி பாதம் பகுதியில், படிக்கட்டுகள், தண்ணீர் வசதி செய்யப்பட உள்ளன.
டிக்கெட் கவன்டர் அருகில் கல் மண்டபம் அமைத்தல், அமரும் இடம், கைப்பிடி, குடிநீர் வசதி செய்யப்பட உள்ளன. இப்பணிகளை, 2025 ஜூன் மாதத்துக்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

