சீக்கிய மத குரு நினைவு நாள் முதல்வர் ரேகா அழைப்பு
சீக்கிய மத குரு நினைவு நாள் முதல்வர் ரேகா அழைப்பு
ADDED : நவ 25, 2025 01:16 AM

புதுடில்லி: “டில்லி அரசு நடத்தும் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேவ் பஹதுார், 350வது நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும்,” என, முதல்வர் ரேகா குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.
சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேவ் பஹதுார், 350வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. டில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 23ம் தேதி முதலே நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
குருவின் நினைவு நாளான இன்று, டில்லி செங்கோட்டை வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரேகா சமூக வலைதளம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். அதில், ரேகா குப்தா கூறியிருப்பதாவது:
சுதந்திரம் மற்றும் மனிதகுலத்தைப் பாதுகாக்க தன்னையே தியாகம் செய்தவர் குரு தேவ் பஹதுார். குரு சாஹிப்பின் இணையற்ற தியாகம், உண்மை, நீதி மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது மனித வாழ்வின் மிக உயர்ந்த கடமை என்பதை நினைவில் கொள்ள நம்மைத் துாண்டுகிறது.
குரு சாஹிப்பின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்து ஒளி,ஒலி நிகழ்ச்சி, கீர்த்தனை தர்பார் ஆகியவை இன்று நடக்கிறது.
எனவே, மக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்று, குரு சாஹிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தர்மேந்திரா
டில்லி முதல்வர் ரேகா குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
“இந்திய சினிமா ஒரு அழியாத சின்னத்தையும், தலைமுறைகளால் நேசிக்கப்படும் கலைஞரையும் இழந்து விட்டது. நம் சமூகத்தின் உணர்ச்சிகள், போராட்டங்கள் மற்றும் உணர்வுகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்,” என கூறியுள்ளார்.
துணைநிலை கவர்னர் சக்சேனா, “தர்மேந்திராவின் மரணம் இந்திய சினிமாவின் ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தன் சிறந்த நடிப்பால் ஏராளமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த தர்மேந்திரா, சிறந்த கலைஞர் மட்டுமல்ல, அற்புதமான ஆளுமைத் திறன் கொண்ட துடிப்பானவர். மில்லியன் கணக்கான மக்களிடம் அழியாத முத்திரையைப் பதித்தவர்,” என, கூறியுள்ளார்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய சினிமாவில் தர்மேந்திராவின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது மறைவுச் செய்தி மிகவும் வருத்தம் ஏற்படுத்தியது. ஆன்மா சாந்தியடையட்டும்,” என, கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் ஹரியானா முன்னாள் முதல் வருமான பூபிந்தர் சிங் ஹூடா, “இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான தர்மேந்திராவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது எளிமை, கலகலப்பு மற்றும் குறிப்பிடத்தக்க நடிப்புத் திறமையால் மில்லியன் கணக்கான இதயங்களில் அவர் உருவாக்கிய இடம் அழியாமல் நிலைத்திருக்கும். இது இந்தியத் திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு,” என, கூறியுள்ளார்.

