தேஜஸ்வியை கூட்டணிக் கட்சிகளே முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை; சிராக் பாஸ்வான் கிண்டல்
தேஜஸ்வியை கூட்டணிக் கட்சிகளே முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை; சிராக் பாஸ்வான் கிண்டல்
ADDED : அக் 18, 2025 01:45 PM

பாட்னா: எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளே பீஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்கவில்லை என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.
பாட்னாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
உள்துறை அமைச்சர் அமித் ஷா பீஹார் வருகிறார். வரலாற்று வெற்றியை நோக்கி கை கோர்த்து நடப்பது எங்கள் கூட்டணியின் பலம். பீஹாருக்கு 11 முறை அவர் வந்து சென்றதன் மூலம், எவ்வளவு தூரம் அவர் இந்த மாநிலத்திற்கு முன்னுரிமை தருகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் நேருக்கு நேர் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அங்கே கூட்டணியில் உள்ளவர்கள் தங்கள் சொந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.
தம் கூட்டணியில் உள்ள 5 கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தையை பாஜ முடித்துள்ளது. 243 வேட்பாளர்களும் தெளிவாக இருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டணியை போல எங்களுக்குள் எந்த குழப்பமும இல்லை.
தேஜஸ்வி யாதவ் தான் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று யார் கூறுகிறார்கள்? அந்த கூட்டணியில் உள்ளவர்களே (எதிர்க்கட்சிகள்) அவரை ஏற்கவில்லை. இப்படி பல மோதல்களை கொண்டுள்ள ஒரு கூட்டணி, பீஹாரை வளர்க்க முடியாது.
இவ்வாறு சிராக் பாஸ்வான் கூறினார்.