ADDED : டிச 17, 2024 07:32 AM

மூணாறு; மூணாறில் நேற்று காலை வெப்பம் 8 டிகிரி செல்சியஸ் பதிவானதால் குளிர் அதிகரித்தது.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும் என்றாலும் இந்தாண்டு ' பெஞ்சல்' புயல் தாக்கத்தால் நவ.4 வரை மழை பெய்தது. காலையில் குறைந்தபட்ச வெப்பம் 13 முதல் 16 டிகிரி செல்சியஸ் வரையும் பகலில் அதிகபட்ச வெப்பம் 19 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையும் இருந்தது.
கடந்த வாரம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், மூணாறில் பலத்த மழை பெய்தது. நவ.14ல் மழை குறைந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்தது.
நேற்று காலை குறைந்தபட்ச வெப்பம் 8 டிகிரியாக பதிவானது. குண்டளை எஸ்டேட் பகுதியில் 7.8 டிகிரி பதிவானது. குளிர் அதிகரித்ததுடன், புல்வெளிகளில் பனித் துளிகள் படர்ந்து அழகுடன் காட்சியளித்தன. இதே காலநிலை நீடித்தால் வரும் நாட்களில் குளில் மைனஸ் டிகிரியை எட்டி உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது.