திருமணம் குறித்து பேச வரும்படி அழைத்து கல்லுாரி மாணவர் கொலை
திருமணம் குறித்து பேச வரும்படி அழைத்து கல்லுாரி மாணவர் கொலை
ADDED : டிச 12, 2025 12:19 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில், பொறியியல் மாணவரை திருமணம் குறித்து பேச வரும்படி அழைத்து சென்ற காதலியின் குடும்பத்தினர், அவரை கொடூரமாக அடித்து கொன்றனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் மைசம்மகுடா பகுதியில் உள்ள, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் ஜோதி ஷ்ரவன் சாய், 20. ஹைதரபாதில் உள்ள குட்புல்லாபூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.
அவருக்கு, சங்காரெட்டி மாவட்டம், பீரம்குடா இசகாபவியை சேர்ந்த ஸ்ரீஜா,19, என்ற மாணவியுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு ஸ்ரீஜா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்ரீஜா உடனான நட்பை துண்டித்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர், மாணவர் சாயை பலமுறை மிரட்டினர்.
இந்நிலையில் திருமணம் குறித்து பேச வீட்டுக்கு வரும்படி ஸ்ரீஜாவின் குடும்பத்தினர் சாயை அழைத்து சென்றனர். அங்கு சென்று பேசிக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீஜாவின் குடும்பத்தினர் சாயை திடீரென கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கினர். இதில் சாய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், கால் மற்றும் விலாவிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சாயை குகாட்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அப்பகுதியினர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அமீன்பூர் போலீசார் ஸ்ரீஜா குடும்பத்தினர் மீது கொலைவழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

