ADDED : செப் 24, 2024 07:39 AM
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா ஆகியோரது ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை, பெங்களூருக்கு கடத்தி வந்து, கடந்த ஜூன் 9ம் தேதி இரவு, சுமனஹள்ளி ஷெட் ஒன்றில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மறுநாள் 10ம் தேதி காலை, மழைநீர்க் கால்வாய் ஓரத்தில், அவர் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், அதே நாள் இரவு 7:00 மணியளவில், ராகவேந்திரா, கார்த்திக், நிகில் நாயக், கேசவமூர்த்தி, ஆகியோர், தாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறி, காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில், சில நாட்களுக்கு முன்பு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிலர் ஜாமின் கேட்டு, பெங்களூரு 57வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை, நீதிபதி ஜெய்சங்கர் நேற்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, இந்த வழக்கில் 15வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்திக், 17வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிகில் நாயக் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், 16வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேசவமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இவருக்கு நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி நிபந்தனை ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
கொலை நடந்து மூன்றரை மாதங்களுக்கு பின், ரேணுகாசாமி கொலை வழக்கில், மூவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பவித்ரா கவுடா ஜாமின் மனு விசாரணை வரும் 25ம் தேதிக்கும்; தர்ஷன் ஜாமின் மனு விசாரணை வரும் 27ம் தேதிக்கும், சிட்டி சிவில் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.